றகர் வீரர் வஸீம் தாஜுதீன் மரணம் குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தாஜுதீன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சில காணொளிகளை உறுதி செய்து கொள்ள அந்தக் காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
கொலை தொடர்பில் அப்போது பொலிஸார் கிரமமான விசாரணைகள் எதனையும் நடத்தியிருக்கவில்லை எனவும் இதனால் தற்போது விசாரகைளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், 2012ம் ஆண்டு தாஜுதீன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான சீ.சீ.டி.வி. காணொளிக் காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அழிக்கப்பட்டுள்ள குறித்த தகவல்களை மீளப்பெற்றுக் கொள்ள பொலிஸார், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி காட்சிகள் மூன்றாண்டு காலம் வரையில் வைத்திருக்கப்படாது எனவும் குறுகிய காலத்தில் காட்சிகள் அழிக்கப்பட்டுவிடுமெனவும் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை பதிவாகியுள்ள காணொளிகளை மீட்டெடுத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.