தாஜுதீன் கொலை விவகாரம் – சிக்கலில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட நால்வர்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக புலனாய்வு வட்டாரத் தகவல்களால் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, தற்போதைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.

இவர்களில் தற்போது சேவையில் இருக்கும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தாஜுதீன் படுகொலையின்போது பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியாக இருந்துள்ளார். அத்துடன் குறித்த படுகொலையை மறைப்பதற்கு அனுர சேனநாயக்கவுக்கு பெரும்துணையாகவும் இருந்துள்ளார்.

வஸீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்தை வாகன விபத்தில் நேர்ந்த மரணமாக குறிப்பிட்டு பொலிசார் வழக்கை முடித்திருந்த போதிலும், வாகன விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு எந்தவொரு கட்டத்திலும் போக்குவரத்துப் பொலிசாரின் உதவிகள் பெறப்பட்டிருக்கவில்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறாக ஏராளமான சந்தேகங்களை மூடிமறைத்தே படுகொலையை விபத்து மரணமாக திசைதிருப்ப பொலிசார் ஒத்துழைத்துள்ளனர் என்பது குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை,வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் அக்காலப்பகுதியில் பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் அவரது மணிபர்ஸ் விழுந்து கிடந்தமை அதில் ஒன்றாகும்.

எனினும் வஸீம் தாஜுதீன் குடிபோதையில் விபத்துக்குள்ளாகி மரணித்துள்ளதால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வது பலனற்றது என்றும் அது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்துவிடும் என்பதால் மேலதிக விசாரணைகளுக்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் அனுர சேனநாயக்க வஸீமின் குடும்பத்தினருக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளமை குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அனுர சேனநாயக்க உள்ளிட்ட நான்கு முக்கியமான பொலிஸ் அதிகாரிகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.