தான்சானியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 44 பேர் உயிரிழப்பு…

தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து 100-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.