தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்த நிலையில் விபத்துக்கு காரணமான படகு நிறுவன உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது.
தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு ஜனாதிபதி ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்று முதல் நான்கு நாட்கள் தேசிய துக்கதினமாக அனுசரிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.