மகப்பேறு காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் தனி அறைகள் ஒதுக்க வேண்டும் என பிரித்தானிய மகப்பேறு பாகுபாடு நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானிய நிறுவனங்களில் பணி புரியும் பெண்களின் பிரசவ நாட்களில் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட சில சலுகைகள் அளிக்கப்படுகிறது.
ஆனால், இந்த மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் தாய்மார்களுக்கு போதிய ஆதரவும் சலுகைகளும் நிறுவனங்கள் வழங்குவதில்லை என தற்போது புகார்கள் எழுந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த 800 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், மகப்பேறு விடுமுறை முடிந்த பின்னர் பணிக்கு திரும்பும் தாய்மார்களில் 50 சதவிகித நபர்களுக்கு அவர்கள் ஏற்கனவே பெற்ற ஊதியத்தை விட பாதியளவு குறைவாக பெறுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் 8-ல் ஒரு தாய்மார் தனது வேலை பளுவின் காரணமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்தியுள்ளதாகவும் 17 சதவிகித பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகப்பேறு பாகுபாடுகளை சுட்டிக்காட்டும் Slater and Gordon என்ற நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞரான பவுலா சான் கூறுகையில், மகப்பேறு விடுமுறையை முடித்து விட்டு பணிக்கு திரும்பும் தாய்மார்கள் அவர்களின் குழைந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.
இதற்கு மாறாக, நிறுவன உரிமையாளர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவர்களின் அலுவலகங்களில் இருந்தால், அவர்களுக்கு தனி அறைகளை ஒதுக்க வேண்டும்.
அலுவலகத்தின் மதிய உணவு நேரங்களில் குழந்தைகளை அலுவலகங்களுக்கு வரவழைக்கப்பட்டு அந்த தனி அறைகளில் தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு வசதிகளை செய்து தர வேண்டும்.
கூடுதலாக, ஒதுக்கப்பட்ட தனி அறைகளில் அவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை அமைத்து கொடுப்பதால், குழந்தைகளுக்காக பால் பாட்டில்களை அவற்றில் பாதுகாப்பாக பராமரிக்கலாம் என பவுலா சான் கூறியுள்ளார்.
இதுபோன்ற வசதிகளை ஏற்பாடு செய்த தருவதற்கு நிறுவன உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.