வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்து, மணித்தியாலத்திற்கு 12Km வேகத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இச்சூறாவளிக்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது குறித்த இந்த சூறாவளி இந்தியா – கல்கத்தாவிலிருந்து தெற்கு -தென்கிழக்காக 720Km தூரத்திலும், பங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் நகரிலிருந்து தெற்கு – தென்மேற்காக 630Km தூரத்திலும் நிலைகொண்டுள்ளது.
குறித்த சூறாவளி மேலும் வலுவடைந்து பங்களாதேசின் கரையோரத்தை நாளை(30) ஊடறுக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தினால், இலங்கையின் சில பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இடையிடையே சற்றுப்பலமான காற்றும் வீசக்கூடும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு சரிவுகளிலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 80Km வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.