திடிரென மூடப்பட்ட லண்டன் விமான நிலையம்…

லண்டன் விமான நிலையத்தின் அருகில் ஓடும் தேம்ஸ் நதிக்கு அருகில் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

குறித்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் இருந்தமையினால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.