அவுஸ்திரேலிய அணியுடன் இன்று(02) இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் தலையில் அடிபட்டு திமுத் கருணாரத்ன சுருண்டு விழுந்த சம்பவம் இலங்கை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் துடிப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட் இழப்புக்கு 534 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 2-வது நாளான இன்று(02) தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்ன, திரிமன்ன ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.
பாட் கம்மின்ஸ் வீசிய 32-வது ஓவரை கருணாரத்ன எதிர்கொண்டார். அந்த ஓவரின் 4-வது பந்து பவுன்ஸராக வரவே அதில் இருந்து தப்பிக்க தனது தலையை பின்பக்கமாகத் திருப்பி குனிய முயற்சித்தார் கருணாரத்ன.

ஆனால், வேகமாகப் பந்து, உயரம் குறைவாக எழும்பிய நிலையில், கருணாரத்னவின் தோள்பட்டையில் பட்டு, பின்னர் தலைக்கும், கழுத்துப்பகுதியிலும் பட்டு தெறித்தது.
கருணாரத்ன ஹெல்மெட் அணிந்து விளையாடிய போதிலும், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பவுன்ஸரின் வேகம், அவரின் ஹெல்மட்டையும் பதம்பார்த்துள்ளது.
பந்து தலையிலும், கழுத்திலும் பட்டவுடன் நிலைகுலைந்த கருணாரத்ன சரிந்து கீழே விழுந்து மயங்கினார்.
உடனடியாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், இலங்கை, அவுஸ்திரேலிய அணியின் உடற்தகுதி நிபுணர்கள், மருத்துவர்கள் என அனைவரும் உடனடியாக மைதானத்துக்கு விரைந்தனர்.
தொடர்ந்து அவரின் நினைவுகள், பேச்சு, கை, கால் அசைவு போன்றவை பரிசோதிக்கப்பட்டது.
ஆனால், கழுத்துப்பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாகவும், தலையில் வலி இருப்பதாகவும் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் பில் ஹக்ஸ் தலையில் அடிபட்டு மரணமடைந்துள்ள நிலையில், கருணாரத்னே களத்தில் சுருண்டுவிழுந்தவுடன் அவுஸ்திரேலிய வீரர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.