திருகோணமலை துறைமுகத்தின் முகாமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு இந்தியா புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் இந்நிபந்தனைகளுக்கு அமைய உடன்பாடு செய்து கொள்ளப்பட்டால், இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை இயக்குவது உள்ளிட்ட திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இலங்கையின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் தகவல் வெளியிட்டிருந்தார்.
சிறப்பு பொருளாதார வலயத்தை உள்ளடக்கியதாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியது போன்று, இந்தியாவுடன் திருகோணமலைத் துறைமுகம் தொடர்பான உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது.
எனினும், சமனிலைப்படுத்தும் உடன்பாடுகளில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்றும், நீண்டகால நோக்கில் திருகோணமலைத் துறைமுகம் வருமானத்தைப் பெற்றுத் தராது என்றும் இந்தியா கருதுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.