விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலத்தின் கீழ் ஆகக்கூடியது மூன்று விசேட நீதிமன்றங்களை அமைக்க முடியும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் முதற்கட்டமாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் திருத்தச் சட்டமூலம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பிரதம நீதியரசர் விரும்பினால் நாளை மறுதினம் முதலே விசேட நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்த முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்
விசேட நீதிமன்றத்தில் நாள் தோறும் வழக்குகளை விசாரித்து ஆகக்குறைந்தது ஒரு மாதத்தில் ஒரு வழக்குக்கான தீர்ப்பை வழங்க முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.