தமிழகத்தில் குரூப் தேர்வு நடந்த போது திருமண கோலத்தில் மணமகள் வந்து தேர்வு எழுதியுள்ளார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணி, இவரது மகள் அகிலாண்டேஸ்வரி, இளங்கலை பொறியியல் படித்துள்ளார்.
இவருக்கும், விழுப்புரம் மேல்தணிகாலம்பட்டு பகுதியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் பாரதி என்பவரின் மகன் பிரதீப் என்கிற தமிழரசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், அகிலாண்டேஸ்வரி திருமணம் முடிந்த கையோடு தனது கணவரிடம் குரூப்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளேன், தேர்வு எழுத செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட பிரதீப் சிறிதும் தாமதிக்காமல், தனது காரில் அகிலாண்டேஸ்வரியை அழைத்துச் சென்று தேர்வு மையத்தில் விட்டுள்ளார்.
இதனால், மிகுந்த மகிழ்ச்சியில் அகிலாண்டேஸ்வரி தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இதே போல, தருமபூரி மாவட்டம் மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள், காஞ்சனா தம்பதியின் மகன் மணிமாறன்(29).
பி.இ. பட்டதாரியான இவருக்கும் தருமபுரி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நரசிம்மன், வாசுகி தம்பதியின் மகள் சித்ராவுக்கும்(26) நேற்று தருமபுரி கோட்டை மல்லிகார்ச்சுனேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. சித்ரா எம்எஸ்ஸி படித்துள்ளார்.
இந்நிலையில் மணமக்கள் இருவரும், குரூப்தேர்விற்கு விண்னப்பித்துள்ளனர். ஆனால், இருவருக்கும், வேறு வேறு இடத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால், மனிமாறன் முதலில் தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு பின்னர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு சென்று தேர்வை மகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.