மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு புதூர் வீச்சுக்கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீச்சுக் கல்முனை பிரதான வீதியைச் சேர்ந்த விமலநாதன் விநோதினி (24) என்பவரே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவராகும்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த யுவதி வீட்டிலிருந்து கடைக்கு பொருட்களை வாங்குவதற்காகச் சென்று கொண்டிருக்கும்போது உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் யுவதி மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உட்காயங்கள் காரணமாக பின்னர் அவர் அங்கிருந்து அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய் அதிகாலை உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி மரணித்த யுவதிக்கு மே 17 ஆம் திகதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.