இலங்கையில் திருமண வயதெல்லை 18 ஆக இருக்கின்றபோது, முஸ்லிம் தனியார் சட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் விவாகம் செய்வதற்கான வயதெல்லையை 16 வரையாவது கொண்டு வர வேண்டுமென்ற விடயத்தில் சில முரண்பாடுகளுக்கு மத்தியிலும் உடன்பாடு காணப்பட்டாலும் இவ்விடயத்தில் பிடிவாதமாக இருப்பதில் எனக்கும் கூட உடன்பாடில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனையில் நேற்று(14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
திருமண வயதெல்லை விடயத்தில் சற்று நெகிழ்வுத் தன்மையயைப் பேண வேண்டியுள்ளது, குறிப்பாக மருத்துவ ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் குறைந்த வயதுத் திருமணம் பாதிப்புக்களை கொண்டமைந்துள்ள நிலையில் குழந்தைப் பராமரிப்பு, குழந்தை பெறுவதற்கான தயார் நிலை என்பன போன்ற விடயங்களில் உள்ள அடிப்படைகளை வைத்து இவற்றைக் கூறினாலும் பாரிய விபரீதங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.
இதில் நெகிழ்வுத் தன்மையுடன் அரசியல்வாதிகளும் உலமாக்களும் சட்ட வல்லுநர்களுமாகச் சேர்ந்து ஒரு இணக்கத் தீர்வை எட்டிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கின்ற அமைச்சரவை உப குழுவை காட்டி, அதை ஜீ.எஸ்.பி. சலுகை பெறப்போகின்றோம் என்று ஒரு அமைச்சர் சொன்னதை வைத்து சில குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை செய்யத் தொடங்கியிருக்கின்றன.
இதற்கெல்லாம் பிரதான காரணம் இதற்கென்று நியமிக்கப்பட்ட குழு கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக இவ்விடயத்தை இழுத்தடித்ததுதான். நான் நீதி அமைச்சராக இருக்கின்றபோது பல தடவைகள் குழுவுக்குப் பொறுப்பானவர்களை, என்னுடைய காலப்பகுதிக்குள் இதனை செய்து முடித்துவிடுங்கள் என்று கேட்டும் நடக்காமல், இன்னும் முடியாமல் இருக்கின்ற நிலையில்தான், ஒரு சில விடயங்களுக்காக இது இழுத்தடிப்புச் செய்யப்பட்டது. செய்து முடித்த விடயங்களையாவது திருத்தம் செய்திருந்தால் நிறைவடைந்திருக்கும்.
உடன்பாடு கண்ட விடயங்களைக்கூட நாங்கள் முடிவுக்குக் கொண்டு வராமல் சின்னச் சின்ன விவகாரங்களுக்கு, உதாரணத்திற்கு 16 வயதை திருமண வயதெல்லையாக நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்று இணக்கப்பாடு வந்தபிறகு அதற்குக் குறைவாகவும் வழங்க வேண்டுமென்று பிடிவாதமாக இருப்பது எனக்கும் கூட உடன்பாடில்லை
இப்படியான விடயங்களில் பிடிவாதத் தன்மை காட்டுவது முழு சமூகத்தையுமே ஆணாதிக்கவாத சமூகமாக, பெண் அடக்கு முறையாளர்களாக பார்க்க வைக்கின்ற துர்ப்பாக்கிய நிலையை கொண்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன்.
எனவே இது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்ற இக்குழு இன்னும் தாமதிக்காமல் இந்த திருத்தங்களை சிபாரிசு செய்யவேண்டுமென்று மிக அடக்கமாக வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன். இங்கிருக்கின்ற உலமாக்கள் என்னோடு கோபித்துக் கொள்மாட்டார்கள். ஏனென்றால் இது தொடர்பாக அவர்களுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றேன்.
காதி நீதிமன்ற செயற்பாடுகளிலும் பெண்களுக்கான பங்கு என்ற விடயத்தில் மிகுந்த தாராளத் தன்மையோடு உலமாக்கள் விட்டுக்கொடுப்புடன் முன்வர வேண்டும். இவ்வாறான விடயங்களை பகிரங்கமாகப் பேசக்கூடாதென்று இருந்தாலும் அழுத்தங்கள் கூடுதலாக இருப்பதால், அவ்வாறான அழுத்தங்களிலே சில நியாயப்பாடுகள் இருப்பதைக் காணுகின்றபோது, பல வருடங்களாக இது தேவையில்லாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது, என்கின்றபோது இவ்விடயங்கள் பூதாகர மாவதற்கு நாங்களே வழியெடுத்துக் கொடுத்துவிட்டோம் என்றாகிவிட்டது.
சில இயக்கங்கள், குழுக்கள் எடுத்ததற் கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள் கின்றன. வீதியில் பேசுகின்ற வார்த் தை களும் மற்றவர்கள் எங்களை அவமதிப்பதும் இழிவுபடுத்துமாக இருக்கின்ற நிலையாக மாறியிருக்கின்றது. நபி (ஸல்) உச்சக்கட்ட பொறுமை காத்து, விட்டுக் கொடுத்து அவமதிப்புக்களையும் அவதூறுகளையும் தாங்கிக் கொண்டிராவிட்டால் இஸ்லாம் உலகில் வளர்ந்திருக்காது.
ஆனால், இன்று பொறுமையிழந்து தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்களாகி எல்லா விவகாரங்களுக்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்து மற்ற சமூகங்களை அவமதிக்கின்ற பாங்கில் பேசுகின்ற குழுக்களை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
எங்களது பெண்கள் அரசியலுக்கு வருவதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இருக் கின்றது. உள்ளூராட்சி மன்றங்களிலே 25 சதவீத பெண் உறுப்புரிமையை வழங்கி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும். முஸ்லிம் நாடுகளில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச் சர்கள் என்று இருக்கின்ற நிலையில், ஆற்றலும் ஆளுமையும் உள்ள பெண் களை அரசியலுக்கும் தயார்படுத்த வேண் டும் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
(நன்றி – வீரகேசரி)