தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை -உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் தீபாவளியன்று முதல் நவம்பர் முதலாம் திகதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிப்பொருட்களை பயன்படுத்த உச்சநீதிமன்றம் நேற்று(09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நவம்பர் முதலாம் திகதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடந்த வருடம் உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. பட்டாசுகள் காரணமாக சுற்றுச்சூழல் மிகுந்த அளவு பாதிக்கப்படுவதுடன் அதிலிருந்து வெளிப்படும் புகை காற்றை மாசுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பட்டாசு உள்ளிட்ட வெடிப்பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். இதனால், பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் குறித்த தடையை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை விசாரணை செய்த நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.