துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்…

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.

துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தூத்துக்குடியில் 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆனால் பேருந்துகள், புகையிரத சேவைகள் வழக்கம்போல் இடம்பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பேருந்து நிலையம் மற்றும் புகையிரத நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.