உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து அங்கு வாழும் பொது மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருகின்றனர். அப்போது அவர்களது படகு கடலில் மூழ்கி பெருமளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றமை அறிந்ததே.
இது போன்ற துயரச்சம்பவம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து மரப்படகு ஒன்றில் கிரீஸ் நாட்டில் உள்ள லெரோஸ் தீவுக்கு பலர் புறப்பட்டு வந்தனர். துருக்கியில் மத்திய தரைக்கடலில் வந்தபோது அவர்கள் வந்த படகு தண்ணீரில் மூழ்கியது.
தகவல் அறிந்ததும் துருக்கி கடலோர பாதுகாப்பு படையினர் மூழ்கிய படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் 17 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். அவர்களில் 5 பேர் குழந்தைகள்.
இவர்கள் படகில் ஒரு அறைக்குள் பிணமாக கிடந்தனர். இவர்கள் தவிர அந்த படகில் பயணம் செய்த 20 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அவர்கள் உயிர்காப்பு கவச உடை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(riz)