துறைமுகத்தில் சட்டப்படி வேலை

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அதன் தலைவர் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி துறைமுக தொழிற் சங்க தலைவர்கள் ஐந்து பேர் நேற்று நண்பகல் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு, கோட்டை விமலதர்ம சுற்றுவட்டத்திலுள்ள துறைமுக பிரவேச வாயிலின் அருகில் இந்த போராட்டத்தை அவர்கள் நடாத்தி வருகின்றனர்.

துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் துறைமுக தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோர் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் செயற்படுவதாகவும், கப்பல் பிரிவு இயக்குனர்களுக்கும் அதன் நிருவாகிகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் இந்த சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், துறைமுகத்துக்குள் பாரிய பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் துறைமுக தொழிற்சங்க ஒன்றியம் தொடர்பில் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் உதேனி களுதன்திரி குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது, துறைமுகத்துக்குள் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் துறைமுக செயற்பாடுகள் பாரியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

துறைமுக அதிகார சபையின் பொறுப்பாளர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், சாகும் வரை போராட்டமாக இதனை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்