ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹே-வுக்கு இன்று 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தென்கொரியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
ஊழலற்ற ஆட்சியை வழங்குவேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியை கைப்பற்றிய பார்க் கியூன் ஹே வெகு குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.
அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும், ஜனாதிபதியுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.
இதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 2 கோடியே 30 லட்சம் வோன் (அமெரிக்க டாலர்களில் சுமார் 2 கோடியே பத்து லட்சம்) அதிகமான பணப்பலன்களை பார்க் கியூன் ஹே அடைந்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.
இதையடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிம் சே-யூன், குற்றவாளி பார்க் கியூன் ஹே-வுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வழக்கமாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துவந்த பார்க் கியூன் ஹே இந்த தீர்ப்பின்போதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தென்கொரியா நாட்டு நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு முழுவதும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பானதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.