தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது…

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய(11) போட்டியில் முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவரில் 191 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்திருந்தது. புவனேஸ்வர் குமார், பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து தவான் உடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். விராட் கோஹ்லி முதலில் சற்று திணறினார். ஆனால் தவான் நம்பிக்கையுடன் விளையாடினார். நேரம் செல்ல செல்ல விராட் கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இதனால் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இருவரை பிரிக்க திணறினார்கள்.

தவான் 61 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விராட் கோஹ்லி 71 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தவான் 83 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 78 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது.

தவான் ஆட்டமிழக்க யுவராஜ் சிங் களம் இறங்கினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. 38-வது ஓவரின் கடைசி பந்தை யுவராஜ் சிங் சிக்சருக்கு தூக்க இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி 101 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 25 பந்தில் 23 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா 15ம் திகதி பர்மிங்காமில் நடைபெறும் அரையிறுதியில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

 

(rizmira)