தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸுக்கு சத்திரசிகிச்சை..

தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸுக்கு, முழங்கையில் காணப்படும் உபாதை காரணமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, எட்டு தொடக்கம் பத்து வாரங்களுக்கு, அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்படுகிறது.

அவருக்குக் காணப்பட்ட முழங்கை உபாதை காரணமாக, அண்மையில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்குபற்றியிருக்கவில்லை.

தற்போது, அவுஸ்திரேலியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாட முடியுமா என்பதை ஆராய்வதற்காக, அவருக்கு உடற்றகுதிச் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் சித்தியடையாததைத் தொடர்ந்தே, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சத்திரசிகிச்சை காரணமாக, அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும், பின்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடற்றகுதியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டால், இலங்கைக்கெதிராக டிசெம்பரில் இடம்பெறவுள்ள தொடரில் அவர் பங்குபற்றுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியத் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாம்:

ஃபப் டு பிளெஸிஸ், கைல் அபொட், ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டியன், குயின்டன் டீ கொக், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், வெய்ன் பார்ணெல், ஆரொன் ஃபங்கிசோ, அன்டிலே ஃபெஹ்லுக்வாயோ, கஜிஸ்கோ றபடா, றீலி றொஸோ, தப்ரைய்ஸ் ஷம்சி, டேல் ஸ்டெய்ன்.