தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரங்களிலும் திறந்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7.30 முதல் இரவு 10 மணிவரை மிருக காட்சி சாலையில் சில பகுதிகளை மட்டும் நாளை(22) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக மிருக காட்சி சாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மிருகங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் தலைவர் ரவீந்திரநாத் தாபரே, கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மிருக காட்சி சாலைகள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும்போது, மிருகங்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா இரவு நேரத்தில் செயல்படுகிற மிருகங்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமே மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என்றும் இதன் மூலம் இரவு நேரத்தில் தூங்கும் ஏனைய மிருகங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரவு நேரத்தில் மிருக காட்சி சாலைக்கு செல்லும் மக்கள், மிருகங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது மற்றும் அவற்றை படம் பிடிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிருக காட்சி சாலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.