(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், மக்கள் போராட்டங்களில் முன்னணி போராட்டக்காரராக திகழ்ந்த இஸ்மத் மெளவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (10) அவருக்கு பிணையளிக்கப்பட்டது.
5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவரை விடுவித்த கோட்டை நீதிவான் திலின கமகே, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையெழுத்திட வேண்டும் என இதன்போது அவருக்கு நிபந்தனை விதித்தார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்ட இஸ்மத் மெளலவி , கடந்த 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவிருந்தார். எனினும் அடையாள அணிவகுப்பு அன்றைய தினம் நடக்கவில்லை. குறித்த அடையாள அணிவகுப்பு நியாயமற்றது என அன்றைய தினம் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கடும் வாதங்களை முன் வைத்திருந்த நிலையிலேயே, அவ்வழக்கு இன்று
(10) விசாரணைக்கு வந்தது.
இதன்போது இஸ்மத் மெளலவிக்கு மேலதிகமாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த அஹமட் அஸ்வர் , மொஹம்மட் சல்மான் ஆகிய சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கிங்ஸ்லி ஹெட்டி ஆரச்சி முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பில் மூன்று சந்தேக நபர்களும் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று நீதிமன்றுக்கு அறிவித்த பொலிஸார் அவர்களில் 11 பேர் ஏற்கனவே பிணையில் இருப்பதாக அறிவித்தனர்.
இந் நிலையில், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட இஸ்மத் மெளலவி உள்ளிட்ட மூவரும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெருமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.