தேசிய அரசில் வலுப்பெறுகிறது முறுகல் – அமைச்சரவை கூட்டங்களை பகிஷ்கரிக்க UNP தீர்மானம்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமையானது தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே பாரிய விரிசல் நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம்(04) சந்தித்து விரிவாக கலந்துரையாடியுள்ளதாக ஸ்ரீகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில், பிரதமருக்கெதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவையில் இருக்கும் வரை அமைச்சரவைக் கூட்டங்களை பகிஷ்கரிக்க முடிவு செய்யவும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவைக்குப் பிரவேசித்தால் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதற்கும் தீர்மானித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(06) குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையினை மீளப் பெறுமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அரச திணைக்களச் செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, சந்திம வீரக்கொடி, எஸ்.பி திஸாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்ன உட்பட 16 பேர் வாக்களித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.