தேசிய அரசைக் கவிழ்க்க முதலாவது ஆர்ப்பாட்டம், ஜேவிபி தலைமையில் நாளை..

தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கான முதலாவது ஆர்ப்பாட்டம், நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா, நேற்று(20) தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தூக்கி எறிந்ததைப் போன்றே, இந்த ஆட்சியையும் ஜே.வி.பி தூக்கியெறியும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“…அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட தேர்தல் தொடர்பான உறுதியின் நேர்மறையான நடவடிக்கை, மக்களது உரிமைகளை ஒடுக்கியமை போன்றவையினாலேயே, இந்த அரசாங்கத்தின் ஆட்சியை இல்லாது செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே, இதற்கான முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம், விஹாரமாதேவி பூங்காவில் இடம்பெறும்..” என்று அவர் கூறினார்.

“..தேசத்தை அபிவிருத்திச் செய்வோம் என்றும் அரசாங்க ​சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தவர்களை தண்டிப்போம் என்றே, அரசாங்கத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கூறியவற்றை செய்யாமல், நாட்டின் பொருளாதாரம் மந்தமாகியுள்ளதோடு, எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்காது, கொள்ளைக் கூட்டங்களை பாதுகாத்து வருகின்றது..” என்று அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய வரிக் கொள்கையால், செல்வந்தர்கள் நன்மையடையவுள்ளதாகவும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

(rizmira)