காலஞ்சென்ற பண்டித் அமரதேவவின் மறைவுக்கு தேசிய துக்க வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவின் பிரியாவிடை நிகழ்வில் மதுபான விருந்து அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பண்டித் அமரதேவவில் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
பண்டித் அமரதேவவின் மறைவுக்கு ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன், அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் தினத்தில் கொழும்பில் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியத் தூதரகம், வெள்ளிக்கிழமை இரவு, கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதியில், வை.கே.சின்ஹாவுக்கு பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
பண்டித் அமரதேவவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும், இந்தியத் தூதுவரின் பிரியாவிடை நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.
இந்த பிரியாவிடை நிகழ்வில், மதுபானங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பிரியாவிடை நிகழ்வில், மதுபான போத்தல்களுக்கு அருகே இந்தியத் தூதுவரும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் காணப்படும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.