ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஆர்.எம்.ஹபீஸ் இராஜினாமா செய்துள்ள நிலையில் அப்பதவிக்கு திருகோணமலை மாவட் டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எந்தவொரு பாராளுமன்ற பிரதிநிதியும் இல்லாத நிலையிலேயே அவருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
முன்னதாக கடந்த வருடம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது.
இவ்வாசனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து உரிய கால அவகாசத்தில் தேர்தல்கள் திணைக்களத்திற்கு உறுப்பினர்களின் பெயர், விபரங்களை வழங்கவேண்டிய நெருக்கடியான நிலைமை ஏற்பட்டதையடுத்து ஏ.ஆர்.எம். ஹபீஸ் மற்றும் சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவிடம் கையளித்திருந்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தௌபீக் நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், பொதுச் செயலாளர் ஹசன் அலி, வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாரூக் ஆகியோரின் பெயர்களும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக பரிசீலனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(நன்றி – வீரகேசரி)