தமிழகத்தில் 7-வது நாளாக இன்றும்(10) பேரூந்து பணிபுறக்கணிப்பு நீடிக்கின்றமையினால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பள உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த 4 ம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்க ஊழியர்களுடன், தற்காலிக சாரதி, பேரூந்து நடத்துனர் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்ற போதும் குறைந்த அளவிலான பேருந்துகளே செல்வதால் போக்குவரத்து முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததுடன், போராடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட சில தொழிலாளர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இந்த விவகாரம் நேற்று(09) எதிரொலித்தது. முதல்வர் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இன்றும் இப்பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.