(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பேராதனை போதனா வைத்தியசாலையில் இரு குழந்தைகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் தரமற்ற மயக்க மருந்து, கையிருப்பு திரும்பப் பெறப்படும் என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) உறுதியளித்த போதிலும், அது இன்னும் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பிட்ட மயக்க மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இதற்கு முன்னர் மேலும் பல மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“தரமற்ற மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் என NMRA நாட்டுக்கு உறுதியளித்தது. ஆனால், சர்ச்சைக்குரிய மருந்து இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்,” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.