தொழிலதிபர் முதல் பண்ணை வீடு வரை… ராமமோகன ராவின் ‘ரணகள’ பக்கங்கள்..!

தமிழ்நாடு தோன்றிய காலந்தொட்டு வரலாற்றில் முதல் முறையாக தலைமைச் செயலாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து 131 கோடி பணம், 171 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிந்து கைது செய்தது. சேகர்ரெட்டி கொடுத்த தகவல் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் உள்பட 13 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. ராமமோகன ராவ் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெயர் குறிப்பிட விரும்பாத ராமமோகன ராவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமமோகன் ராவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர் ஆவடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். இவர் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு பிசினஸில் கால் பதித்து அபார வளர்ச்சியடைந்தார். புகழின் உச்சியில் இருந்தபோது ஆவடியில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக் கூடத்தில் அந்த தொழிலதிபர் தன்னுடைய பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடுவார். அப்போது சிறப்பு விருந்தினராக ராமமோகன ராவ் கலந்து கொள்வார். அவருடன், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என ஒரு பட்டாளமே அந்த விழாவில் பங்கேற்கும். நகமும், சதையும் போலவே அந்த தொழிலதிபருடன் ராமமோகன ராவ் இருப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்போது ராமமோகன ராவ் குடியிருக்கும் அண்ணா நகர் வீடு அந்த தொழிலதிபரின் ஏற்பாட்டில் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பாலியல் விவகாரத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு டாக்டர் சிக்கினார். அந்த வழக்கில் ஆவடி தொழிலதிபரின் பெயரும் அடிப்பட்டது. அப்போது இருந்த தி.மு.க ஆட்சியில் மூத்த அமைச்சர் ஒருவரால் ஆவடி தொழிலதிபர் தப்பினார்.

அடுத்து அந்த தொழிலதிபர் தி.மு.க.விடம் அதிக நெருக்கமானார். இதற்காக அறங்காவலர் குழு தலைவர் பதவி வரை அவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்து தி.மு.க சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட விரும்பிய அந்த தொழிலதிபருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த காலகட்டத்தில் ராமமோகன ராவ் அறிவுரையின் பேரிலேயே அந்த தொழிலதிபர் செயல்பட்டதாக சொல்கிறார்கள். இதன்பிறகு தி.மு.க.விடமிருந்து ஒதுங்கிய அந்த தொழிலதிபருக்கு தொழிலிலும் பெரியளவில் சரிவு ஏற்பட்டது. இவர், தே.மு.தி.க விஜயகாந்த்தின் நெருங்கிய உறவினர்.
 

சிஷ்யர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

நெல்லை மாவட்டத்தில் சப்-கலெக்டராக இருந்த அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பூர்வீகம் ஆந்திரா. பிறகு அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார். அங்கிருந்து அவர் தென்மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டார். அவர், ராமமோகன ராவின் சிஷ்யர் என்றே சொல்கின்றனர். இவர்கள் இருவரும் திருவேற்காடு, மகாலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்திப்பார்களாம். அப்போதுதான் அவர்களது ஆலோசனை நடத்தப்படுமாம். மகாலட்சுமி நகர் வி.ஐ.பி.க்கள் குடியிருக்கும் பகுதி. அங்கு நள்ளிரவு வரை சந்திப்பு தொடருமாம். தொழிலதிபர்கள், மணல் குவாரி அதிபர்கள் என பலர் அந்தச் சந்திப்பில் பங்கேற்பதுண்டு. ராமமோகன ராவின் நம்பிக்கைக்குரியவரான அந்த சிஷ்யரான கலெக்டரை சென்னை சுற்றுவட்டார பகுதியிலேயே பணியமர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஒரு கலெக்டர் சஸ்பெண்டே செய்யப்பட்டுள்ளார். இருந்தும் அந்த கலெக்டர் திருவள்ளூரிலிருந்து மாற்றப்பட்டு விட்டார். தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சந்தேக வளையத்தில் இருக்கிறாராம். இவரைத் தவிர இன்னும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராமமோகன ராவின் சிஷியர்களாக இருக்கிறார்களாம்.

சி.எம்.டி.ஏ அதிகாரி!

ராமமோகன ராவின் உள்விவரங்களை அறிந்த ஒருவர் அண்ணாநகர் மேற்கில் குடியிருக்கிறார். இவர், சி.எம்.டி.ஏ அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது பெயரில் கொடைக்கானலில் எஸ்டேட் ஒன்று உள்ளதாம். அதன்மதிப்பு மட்டும் பல கோடி என்கின்றனர். அடுத்து அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாம்.

முன்னாள் அமைச்சர்!

அ.தி.மு.க.வில் கோலோச்சிய அந்த முன்னாள் அமைச்சர் இப்போது ராமமோகன ராவ் வீட்டில் சோதனை என்றதும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்கிறார். “அடுத்து நான்தான். என்னிடம் விசாரணை நடந்தாலும் உங்களிடம் என்னைப்பற்றி விசாரித்தாலும் எந்த தகவலும் வெளியே சொல்லக்கூடாது. இப்போது அம்மா இல்லை. அவர் இருந்தால் விசாரணை நடந்திருக்காது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலை சரியில்லை” என்று புலம்பி உள்ளார்.

பனையூர் பண்ணை வீடு!
 
ராமமோகன ராவிற்கு நெருக்கமானவர் ஒருவரின் பெயரில் பனையூர், கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பண்ணை வீடு இருக்கிறதாம். அந்த வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம் ராமமோகன ராவ். வார விடுமுறையில் ஓய்வெடுக்க அங்கு செல்வதுண்டாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டின் அருகில் உள்ள கோயில் இடத்தை வளைக்க முயற்சிகள் நடந்துள்ளது. அதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டரிடம் பொது மக்கள் புகார் கொடுத்த செய்திகள் வெளியானது. இருப்பினும் அந்த இட விவகாரம் அமைதியாகி விட்டது.
இப்போது இந்த ரெய்டு விவகாரம் இன்னும் என்னனென்ன பூதங்களை கிளப்பிவிடுமோ..!?