இங்கிலாந்து அணிக்கெதிரான ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்து, அந்தத் தொடரில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகள் எவற்றிலும் வெற்றியைப் பெறத் தவறிய இலங்கை அணியின் பெறுபேறுகள், ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததோடு, ஒற்றைய இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்திருந்தது.
அத்தோடு, சுப்பர் தொடர் என அழைக்கப்படும் இந்தத் தொடரில், புள்ளிகள் அடிப்படையில் 4-20 என்ற புள்ளிகளையே இலங்கை பெற்றது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ்; அடுத்ததாக இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியத் தொடர் குறித்துக் கவனஞ்செலுத்தினார்.
“எங்களைப் புத்துணர்வாக்க, எங்களுக்குச் சிறிய ஓய்வு கிடைக்கும். அதன் பின்னர் அடுத்த தொடர், இதைப் போலவே கடினமாக அமையும்.
இடம்பெறவுள்ள அந்த மோதலுக்காக, மனதளவிலும் உடலளவிலும் நாங்கள் சிறப்பாகத் தயாராகியிருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்துத் தொடரின் பெறுபேறுகள் தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும், அத்தொடரில் காணப்பட்ட சிறப்பான விடயங்கள் குறித்துக் கவனஞ்செலுத்த, மத்தியூஸ் முனைந்தார்.
“மிகவும் ஏமாற்றமளிக்கிறது தான், ஆனால் இந்தத் தொடரிலிருந்து சில நல்ல விடயங்களைக் கொண்டு செல்ல முடியும்.
துடுப்பாட்டத்திலும் விக்கெட் காப்பிலும், டினேஷ் சந்திமால் சிறப்பாகச் செயற்பட்டார்.
குசால் மென்டிஸூம் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தார். அவ்வப்போது சிறப்பாக விளையாடினோம்,
ஆனால் நாங்கள் நினைத்தளவு போட்டியை வழங்குவதற்கு, துடுப்பாட்ட வீரர்களுக்குப் பின்புலமாக விளங்க வேண்டியளவு பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கவில்லை” என்றார்.