கேகாலை கபகமுவ கிராமிய வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவரின் கடனட்டையை திருடி அதன் மூலம் சுமார் 34 ஆயிரம் ரூபாவுக்கு தனது முழு குடும்பத்துக்குமான ஆடைகளை கொள்வனவு செய்த அதே வைத்தியசாலையின் சிற்றூழியரான பெண் ஒருவரை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண்கள் இருவரும் கபகமுலவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் வைத்திய சாலையில் பணியினை ஆரம்பித்தது முதல் குறி த்த பெண் சந்தேக நபரான பெண்ணுடன் மிக வும் நெருக்கமாக நட்புடன் பழகி வந்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி இப்பெண் கபகமுவ வைத்தியசாலையிலிருந்து வேலை நிறைவடைந்து கேகாலை பிரதேசத்திலுள்ள ஆடையகம் ஒன்றுக்கு சென்று தனது குடும்பத்துக்கு தேவையான ஆடைகளை தெரிவு செய்துள்ளார்
பின்னர் தான் தெரிவு செய்த ஆடைகளுக்கு கடனட்டை மூலம் பணம் செலுத்துவதற்காக முயற்சித்த வேளையில் தன்னிடமிருந்த கடனட்டை காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் கேகாலை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்துடன் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தனது தோழியான சக ஊழியர் மீது சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்தார்.
அதனடிப்படையில் சந்தேக நபரான பெண்ணை பொலிஸார் 13 திகதி கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது 11 ஆம் திகதி வைத்தியசாலையின் ஓய்வறையில் தனது தோழியின் கைப்பையிலிருந்த கடனட்டையை திருடி கேகாலை நகரிலுள்ள ஆடையகமொன்றில் 34 ஆயிரத்து 514 ரூபாவுக்கு ஆடைகள் கொள்வனவு செய்ததாக ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.