வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் கெப்டன் மோர்தசாவை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
மோர்தசா பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் வைத்துள்ளார். இதில் உள்ள ரசிகர்கள் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த பக்கத்தில் சக வீரரான நசீர் ஹொசைன் இந்திய அணியை வீழ்த்திய சந்தோசத்தில் வீடு திரும்பிய பின்னர், தனது தங்கையுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை இணைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் அறுவெறுக்கத்தக்க கருத்துக்களை பதிவு செய்தனர். இதனால் கடுப்பான மோர்தசா தனது பேஸ்புக் அக்கவுண்டை மூடி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பேஸ்புக் பக்கத்தை எனது அணி வீரரான நசீர் ஹொசைனுக்காகவே மூடிவிட்டேன். பேஸ்புக் கணக்கு தொடங்கிய பிறகு இதுபோன்ற மோசமான அனுபவம் ஏற்பட்டதால், இனி இது எனக்கு தேவையில்லை’’ என்றார்.