நடந்த கதையை விவரித்தார் ஹிருணி – இன்று அடையாள அணிவகுப்பு

தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது டிபென்டர் பயன்படுத்தப்பட்டது உண்மை எனினும், அது தனது அனுமதியுடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸ் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அறுவரை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில், சம்பந்தப்பட்ட டிபென்டருடன் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு தரப்பினரிடம் வந்த, அவர்களது நண்பரும் 12 மற்றும் 4 வயது பிள்ளைகள் இருவரின் தந்தையுமான ஒருவர் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது குறித்து அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், அதனை பெரிதாக கவனத்தில் கொள்ளாத பொலிஸார் “மனைவி சென்றால் அதை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்பது போல கூறியதாகவும், அந்த நபர் குறிப்பிட்டதாக, ஹிருணிகா மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கடத்தல்காரர் இருப்பதாக கூறப்படும் இடம் தனக்கு தெரியும் எனக் கூறிய அவருடன் தனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சென்றதாகவும், அவருடன் பேச வேண்டும் என அழைத்த போது, அவர் வர மறுத்ததால் பலவந்தமாக அந்த நபரை அழைத்துச் செல்ல நேரிட்டதாகவும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தனது தலையீட்டினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தான் தாக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை பின்னரே தனக்கு தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், அவரைக் கடத்தியதாக கூறப்படும் நபருடன் தனக்கு தொடர்பிருந்ததாகவும், எனினும் தனது பிள்ளைகளை எண்ணி கணவருடன் இணைய முற்பட்ட வேளை அதனை மற்றையநபர் தடுத்ததாகவும் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் தான் மீண்டும் கணவரிடம் சென்றால் கணவரை அவர் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், அது குறித்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹிருணிகா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைதான, அறுவரும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.