துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று மும்பை கொண்டு வரப்பட்டதுடன் இன்று(28) இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி, ஓட்டல் அறையின குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் பொலிசார் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் பொலிசார் அனுமதிக்கடிதம் அளித்தது.
அனில் அம்பானிக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இந்திய நேரப்படி இரவு சுமார் 7.15 மணியளவில் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு புறப்பட்டு, சுமார் 9.45 மணியளவில் அவரது உடல் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று(28) காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடக்கவுள்ளதுடன் மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.