நடிக்கும் அத்தனை காட்சியும் இடம்பெற்றிருக்க வேண்டும் – வித்யாபாலன் கண்டிஷன்…

வேலைக்காரன் படத்தில் நடித்த சினேகா, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹரின் போன்ற நடிகைகள் தாங்கள் நடித்த காட்சிகள் படங்களில் வெட்டி எறியப்பட்டதுபற்றி வருத்தம் தெரிவித்திருந்தனர்.

கஷ்டப்பட்டு நடித்த காட்சிகளை எப்படி வெட்டலாம் என சினேகா நேரடியாகவே வேலைக்காரன் பட இயக்குனர் மோகன்ராஜாவுக்கு கேள்வி விடுத்தார். இதையடுத்து அவர் சினேகாவிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ராமராவ் வேடத்தில் அவரது மகன் என்டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை எம்ஜிஆர் வேடம் அணிந்தவர் தொடங்கி வைத்தார்.

படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் என்.டி.ராம்ராவ் மனைவியாக நடிக்க வித்யாபாலனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. முதலில் தயங்கிய அவர் கதை கேட்டபிறகு நடிப்பதாக தலையசைத்திருக்கிறார். ஆனால் இன்னும் கால்ஷீட் ஒதுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். கால்ஷீட் தர வித்யாபாலன் காலதாமதபடுத்துவதற்கு காரணம் தனது கண்டிஷன்களுக்கு படக்குழு உடன்பட வேண்டும் என்பதால்தான்.

வித்யாபாலன் அப்படியென்ன கண்டிஷன் விடுத்திருக்கிறார் என்றபோது, ‘இப்படத்தில் என்டிஆர் மனைவியாக நடிக்க சம்மதம். ஆனால் என்னென்ன காட்சிகள் நடிக்கிறேனோ அதில் எதையும் எடிட்டிங் என்ற பெயரில் வெட்டி எறிந்து ஒரு கெஸ்ட் ரோல் போல எனது கதாபாத்திரத்தை காட்டக்கூடாது. நடிக்கும் அத்தனை காட்சியும் தியேட்டரில் படம் திரையிடும்போது இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த உறுதியை அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டு எழுதித்தர வேண்டும்’என அவர் நிபந்தனை விதித்திருக்கிறார்.