நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ’அவுட்’ கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் 4வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஹாசெல்வுட் வில்லியம்சனுக்கு யார்க்கராக ஒரு பந்து வீசினார். அது அவரது காலில் பட்டதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், பந்துவீச்சாளர் ஹாசெல்வுட் உட்பட அனைத்து வீரர்களும் நடுவரிடன் விக்கெட்டுக்காக முறையிட்டனர். ஆனால் நடுவர் ’அவுட்’ கொடுக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் உடனே 3வது நடுவரிடம் முறையிட்டார்.
தொலைக்காட்சியில் ரிப்ளே(Replay) வீடியோவை சோதனையிட்டதில், பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் 3வது நடுவரும் ’அவுட்’ கொடுக்கவில்லை.
இருப்பினும் அவுஸ்திரேலிய வீரர்கள் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ’யார் அந்த 3வது நடுவர்’ என்று கேட்ட ஹாசெல்வுட் அவரை தகாத வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார். இது அங்கு ஸ்டெம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவானதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து தகாத முறையில் நடந்து கொண்ட ஹாசெல்வுட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
[youtube url=”https://www.youtube.com/watch?time_continue=130&v=OG4gUA7t0Jw” width=”560″ height=”315″]