சுத்தமான குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்த மக்களின் நினைவாக இன்றும் நாளையும் அமைதியான எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்த சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன.
ரத்துபஸ்வல சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சிவில் அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ரதுபஸ்வல சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ரத்துபஸ்வல சம்பவத்தை நினைவுகூறும் நிகழ்வுக்கு சமாந்திரமாக கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியும் இடம்பெறுவதனால், அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என பொலிஸார் நேற்று நீதிமன்றத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இதன்பின்னர், எந்தவொரு குழுவாவது சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால், அவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.