(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் நீதிக்கான நம்பிக்கையை தாம் இழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவருடைய உடலம் தோண்டியெடுக்கப்பட்டு புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகியுள்ள இந்நிலையில் வஸீமின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது தமது குடும்பத்தினரின் இதயங்கள் உடைந்துப்போனதாக வஸீமின் சகோதரரி பேஸ்புக் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
எனினும் அவருடைய மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே உடலத்தை தோண்டுவதற்கு தாம் அனுமதித்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்
எனினும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று அற்றுப்போயுள்ளதாக வஸீமின் சகோதரியான ஆயிஷா தாஜூதீன் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு மே 12ஆம் திகதியன்று வஸீம் தாஜூதீன் தமது சிற்றூந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
முன்னதாக அவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று நம்பப்பட்டது. எனினும் தகவல்கள் வெளியான போது அது கொலை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் வஸீமின் கொலையில் நீதியை பெற்றுத்தருவதாக முன்னைய அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு நாராஹென்பிட்டி பார்க் வீதியில் தாஜூதீன் தனது வாகனத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவர் விபத்தில் உயிரிழந்தார் என பொலிஸார் அப்போது நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.
ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து தாஜுதீன் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு தற்போது அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தாஜூதீனின் சடலம் மூன்று வருடங்களுக்கு பின்னர் கடந்த 2015ம் ஆண்டு தோண்டியெடுக்கப்பட்டது. எனினும் நீதியான எந்தவித தீர்ப்புகளும் இதுவரையில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.