புதிய அரசியல் அமைப்பானது வெற்றிப் பாதையில் செல்லும் போது அதனை சகிக்க முடியாதோர் அதற்கு எதிராக எதிராக அணி திரண்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது;
“..2015ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் 63 இலட்சம் மக்கள் நாட்டின் சமாதானத்தையும், ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டுமென அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவாக செயற்படுவோரை கொலை செய்ய வேண்டுமென கோத்தபாயவிற்கு ஆதரவான அமைப்பு கூறி வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயக ரீதியான பயணமொன்றை ஆரம்பித்துள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாத தரப்பினர் இவ்வாறு குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அண்மையில் கோதபாயவின் அமைப்பான ‘வியத்மக’ அமைப்பினைச் சேர்ந்த முன்னாள் இராணுவ படையதிகாரி, புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரை கொலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை தாங்கிக் கொள்ள முடியாத வெறிபிடித்த சிலர் இவ்வாறு கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வெள்ளை வேன் கலாச்சாரத்தை உருவாக்கிய கோதபாயவின் வெறி இன்னும் அடங்கவில்லை அதன் காரணமாகவே இவ்வாறான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரச அதிகாரமற்ற நிலையில் பொது மேடைகளில் இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்க முடியும் என்றால் அரச அதிகாரம் இருந்த காலத்தில் இவர்கள் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டும்..” என அமைச்சர் மங்கள சமரவீர தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


