அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வாகன உரிமத்திற்கு சமனாகும் வகையில் அவர்களுக்கு கடன்தொகை வழங்குமாறு இலங்கை வங்கியிடம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு கடன் தொகை வழங்க வேண்டுமாயின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும், அதாவது மொத்தமாக 200 கோடி ரூபா கடனை இலங்கை வங்கி வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த கடன்தொகை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த கடன் தொகை தீர்மானம் தனக்கு நியாயமற்றதாக இருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
”முன்னர் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையே நான் பயன்படுத்தி வருகின்றேன்” என ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தாமல் உள்ளன. அவற்றை மீள புதுப்பித்து பாவித்துக் கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த 200 கோடி ரூபா கடன் பெறுவது தொடர்பில் தான் தீர்மானிக்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.