மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிடுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட:டள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.