நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென் அரைப்பாகத்தின் கடற்பரப்புகளில் பெய்து வரும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.