(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன ரீதியான முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகளின் பின்னணியிலும் இவ்வாறான சதி நடவடிக்கையே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொரடுவை, ரதாவடுன்ன பிரதேசத்தில் பாழடைந்த பகுதியிலிருந்து 3 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனை இனரீதியான செயலாக தூண்டிவிட சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் தொடர்ச்சியாக மொரட்டுவ பிரதேசத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக வலுவான வெடி குண்டுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்கள் பரபரப்பப்பட்டுள்ளன.
எனினும் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் கடற்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டது. அவற்றில் இரண்டு மிகவும் பழமையான குண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் மீளவும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ள தயாராகி வருவதாக சிங்ஹலே அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பேராயரிடமும் கருத்துக்களை வினவி ஜனாதிபதிக்கு அது தொடர்பில் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளதாகவும் குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் பிரதீப் சஞ்சீவ தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.