நாட்டில் போதைப்பொருட்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ..

நாட்டில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக நேற்று(23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வருவதற்கு எதிரான சட்டங்கள் பலமாக இருந்தபோதும், சில பிரதேசங்களில் போதைப்பொருள் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்களை மேலும் கடுமையாக்குதல் மற்றும் இவற்றிற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி அத்திட்டங்களை பலப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.