பாதாள குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
பாதாள குழுவினரை கைது செய்வதற்காக புலனாய்வு பிரிவினூடாக தரவுகள் சேகரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையிர் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
பாதாள குழுவினரை கைது செய்வது தொடர்பில் அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதாள குழு உறுப்பினர்கள் மற்றும் அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
பாதாள குழுவினரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
கொழும்பில் கடந்த வாரம் தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.