தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே தாம் அமைச்சுப் பதவியினை பெற்றுக் கொண்டதாக கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக நேற்று(02) பதவியேற்ற நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“நான் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாட்டையும், கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும், தமிழர்களுக்குத் தார்மீக நோக்கத்துடன் நல்லது செய்யவேண்டும். தமிழ் மக்கள் மீது வைத்துள்ள தூர நோக்குடைய சிந்தனையின் அடிப்படையில்தான், நான் பாராளுமன்றப் பதவியை வைத்துக் கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன். மாறாக கதிரையை சூடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களை பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கும், அமைச்சுப் பதவியை பாரமெடுத்துள்ளேன். நான் எப்படி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது, தன்னம் தனியாக குரல் கொடுத்தேன். அப்போது இருந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிக்கப்பட்டுக் கொண்டே கொண்டிருக்கின்றது. தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின் மூலம் அமைத்த போது, தனியாக நின்று, நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்? கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மெளனமானர்கள்?
எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மெளனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே, பாராளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை? மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும், நான் தான் மகஜர் கொடுத்தேன்.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும்..” எனத் தெரிவித்துள்ளார்.