நாம் நேர்மையானவர்கள் ரெய்னா, பிராவோ தெரிவிப்பு

இந்தியன் பிரிமியர் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேடு தொடர்பாக 2010ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இவர், தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார்.

இவர், பிரிமியர் தொடர் சூதாட்டம் குறித்து 2013ல் ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தி அண்மையில் வெளியானது.

அதில், ‘ரெய்னா, ஜடேஜா, டுவைன் பிராவோ சூதாட்டத்தில் ஈடுபட்டனர். ‘புக்கி’ என்று சந்தேகிக்கப்படும் ‘ரியல் எஸ்டேட்’ தொழிலதிபர் பாபா திவான் என்பவரிடம் தலா ரூ. 20 கோடி மற்றும் ‘பிளாட்’ பரிசாக பெற்றனர்,’ என தெரிவித்திருந்தார்.

இது குறித்து ரெய்னா கூறுகையில்; “பொதுவாக விளையாடும் அணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடுவேன். ஆனால், சமீபத்தில் என்னைப் பற்றி பத்திரிகைகளில் தவறான முறையில் செய்தி வெளியானது . இது குறித்து உலகிலுள்ள எனது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, கிரிக்கெட்டில் எப்போதும் உயர்ந்த நேர்மையுடனும், சரியான விளையாட்டு உணர்வுடன் தான் நான் விளையாடி வருகிறேன். என்மீது கூறப்பட்டது போல எவ்வித தவறான செயலிலும் எப்போதும் ஈடுபட்டது கிடையாது.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, ஆதாரம் இல்லாதது. இவ்விடயத்தில் சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கலந்தாலோசித்து சரியான தீர்வொன்று எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

சூதாட்ட புகார் குறித்து சென்னை அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ கூறுகையில்;

“எப்போதும் நியாயமாகவும், சுத்தமாகவும், நேர்மையாகவும் விளையாடுபவன் தான் பிராவோ. கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன். ஏனெனில் இது எனக்கு எவ்வளவோ செய்துள்ளது. அப்படிப்பட்ட எனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் நான் எவ்வித தவறான செயலையும் செய்யவில்லை.

இந்தப்புகார்கள் உண்மையற்றவை. இவ்விஷயத்தில் என்ன செய்வது என்பது குறித்து எனது வக்கீல்கள் குழு பார்த்துக் கொள்ளும். மற்றபடி இப்போதுள்ள நிலையில் இதில் அடுத்து என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியவுமில்லை” என பிராவோ கூறினார்.

(riz)