ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் விபரங்களை பார்க்கும்போது நிதிக்குற்ற விசாரணைகளின் நிலைமை எவ்வாறு உள்ளது என தெரியவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியமான உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
நிதிக்குற்ற விசாரணைகளில் உள்ளவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவும் இல்லை, பாராளுமன்றத்திற்கு வரவும் இல்லை, இதன் மூலம் ஒரு விடயம் புலப்படுகின்றது. அரசுக்கும் இவர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்திருந்தாலும் மக்களுக்கு இது பயனுள்ள விடயமல்ல. இதை மக்கள் வரி அதிகரிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையாகவே கருத்திற்கொண்டனர். எனினும் அதற்கு வெற்றியளிக்கவில்லை என குறிப்பிட்டார்.
மேலும் சாலாவ வெடிப்புச் சம்பவம், மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்காமல் பா.உறுப்பினர்களுக்கான வாகன கொள்வனவில் கூடிய முக்கியத்துவம் வழங்கி வருவதாக விஜித ஹேரத் கூறினார்.
மேலும் இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணை பணிகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை துரிதகதியில் செயற்படுத்துமாறும் இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் எச்சரித்தார்.