நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஜே.வி.பி’யும் கைகோர்க்கிறது

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்குவதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், உண்மையிலேயே இந்த அரசு தமது இயலாமையைக் காட்டுகின்றது. இந்த வரி அதிகரிப்பானது கடனுக்காக போராடும் போராட்டம் என கூற முடியாது.

கடந்த அரசு கடன் வாங்கியிருப்பதாக கூறி இந்த அரசு விளம்பரப்படுத்துகின்றது. அதைக் கண்டு நாம் ஏமாறத் தயாரில்லை என கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சர் மற்றும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை விட்டு தப்பிச்செல்வதென்பது முடியாது என சுட்டிக்காட்டினார்.

இன்று கையடக்க தொலைபேசிக்கு 100 ரூபாய் ரீசார்ஜ் செய்தால், அதில் 49.75 அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என்ற கஷ்டமான சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விஜித ஹேரத், இது ரவி கருணாநாயக்கவுக்கு மாத்திரம் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல. முழு அரசுக்கும் எதிரான பிரேரணை என அறிவித்தார்.

“தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அப்பால் சென்று நாம் பார்க்கின்றோம். இதிலிருக்கும் அனைத்து விடயங்களுக்கும் நாம் உடன்பாடு இல்லை, நாட்டு மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தியிருக்கும் நம்பிக்கையயில்லா பிரேரணை என்று கருதி நாம் இதற்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம்” என இதன்போது விஜித ஹேரத் தெரிவித்தார்.