நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் பிரண்டன் மெக்குல்லம் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (0), ஹேல்ஸ் (20) என்ற முறையில் வெளியேறினர்.
பின் இணைந்த ஜோ ரூட், அணித்தலைவர் மார்கன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்கன் (50) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (104) அடித்து மண்டியிட்டார்.
பின்னர் அதிரடியாக ஆடிய பட்லரும் சதம் (129) கடந்தார். ரஷித் தன் பங்கிற்கு அரைசதம் (69) எடுத்தார். 50 ஓவர் முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 408 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 409 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மெக்குல்லம் (10), குப்டில் (22) மோசமான தொடக்கம் கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த வில்லியம்சன் (45) அரைசத வாய்ப்பை தவறவிட்டார். ராஸ் டெய்லர் (57) அரைதம் அடித்தார். எலியாட் (24) ஏமாற்றினார்.
இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணி 31.1 ஓவரில் 198 ஓட்டங்களில் சுருண்டது.
இங்கிலாந்து அணியில் ஸ்டீவன் பின், ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் அரங்கில் இங்கிலாந்து அணி தனது சிறந்த வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தது.